யாழ்.குடாநாட்டில் மூன்று நாட்காளாகப் பெய்த அடை மழை ஓய்ந்து மூன்று நாட்களாகியும் ஏழாலை தெற்கின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக் காடாகக் காட்சியளிக்கின்றன. ஏழாலை பெரியதம்பிரான் குளம் (ஏழு கோவில் குளம்) பெருக்கெடுத்தமையினால் ஏழாலை தெற்கில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக ஏழாலை தெற்கு விழிசிட்டிப் பகுதியைச் சேர்ந்த 16 குடும்பங்கள் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்த காரணத்தால் இடம்பெயர்ந்து ஏழாலை முத்தமிழ் மன்ற நூலக மண்டபத்தில்
தங்கியுள்ளன.
அத்துடன் ஏழாலை தோப்புப் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த காரணத்தால் 24 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தங்கியுள்ளன.
தோப்புப் பகுதிக்குள் உள்நுழையும் வீதியில் மனிதர்கள் நடமாட முடியாதவளவு மூன்று அடி உயரத்துக்கு மேலாக மழை வெள்ளம் தேங்கிக் காணப்படுகிறது. தற்போதும் குறித்த பகுதியின் சில வீடுகளுக்குள் ஒரு அடிக்கு மேலாக வெள்ளம் பெருகிக் காணப்படுகிறது.
குறித்த பகுதிகளில் வீடுகளுக்குள் தங்கியிருக்கும் பொதுமக்கள் வெள்ளம் காரணமாக வெளியேறுவதற்கு அஞ்சி வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கிணறுகளுக்குள்
வெள்ளம் புகுந்ததால்
குடி நீரின்றி அந்தரிப்பதுடன் மலசல கூடங்களின் குழிகள் வெள்ளம் காரணமாக நிரம்பி வழிவதால் மலசலகூடங்கள் பாவிக்க முடியாத நிலையில் காணப்படுவதுடன் அவை வெள்ளத்துடன் கலந்து தொற்று நோய் பரவும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் இடம்பெயர்ந்த குடிமனைகளுள்ள தோப்புப் பகுதியில் திருடர் குழுவொன்றின் நடமாட்டம் காணப்படுவது தொடர்பில் அறியக் கிடைத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இதன் காரணமாக இடம்பெயர்ந்த பொதுமக்கள் அச்சத்திலுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் இதுவரை அரச அதிகாரிகளோ அல்லது அரசியல் வாதிகளோ நேரடியாக வந்து பார்வையிடவில்லை எனவும் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இன்று புதன்கிழமை (18-11-2015) அதிகாலை வேளையில் குடாநாட்டில் கடும் மழையுடனான காலநிலை காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக