கவனமின்றி வேகமாக அரச பேருந்தைச் செலுத்தி, 97 வயதானவருக்கு மரணத்தை ஏற்படுத்திய சாரதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறையும் இரண்டரை லட்ச ரூபா தண்டமும் விதித்து நீதிபதி இளஞ்செழியன்
தீர்ப்பளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தை அதிவேகமாக ஓட்டிச் சென்றபோது 97 வயதுடைய முதியவர் ஒருவருக்கு விபத்து மரணம் ஏற்படுத்திய சாரதியான கணபதிப்பிள்ளை ரகுநாதன் என்பவருக்கு,
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், 5 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் இரண்டரை லட்ச ரூபா தண்டமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி இந்த விபத்து சம்பவம் நடைபெற்றது.
இந்த சம்பவத்தில், சின்னத்தம்பி மார்க்கண்டு என்ற வயோதிபருக்கு விபத்து மரணம் ஏற்படுத்தியமைக்காக அரச பேருந்து சாரதியாகிய கணபதிப்பிள்ளை ரகுநாதனுக்கு எதிராக தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்தை
கவனமின்றி
அதிவேகமாகச் செலுத்தியமை, போதிய அவதானமும் முள்பாதுகாப்பின்றியும் விழிப்பின்றியும் செலுத்தியமை காரணமாக ஒருவருக்கு விபத்து மரணம் ஏற்படுத்தியதன் அடிப்படையில்,
கணபதிப்பிள்ளை ரகுநாதனுக்கு எதிராகக் குற்றப் பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதன்போது, தன்மீது சாட்டப்பட்ட குற்றத்தை எதிரி ஏற்றுக்கொண்டார்.
எதிரியின் சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி, அவருடைய அரச சேவைக்குப் பாதிப்பின்றி தண்டனை வழங்குமாறு நீதிபதியிடம் விண்ணப்பித்தார்.
வழக்கினையும், எதிரி குற்றத்தை ஏற்றுக்கொண்டதையும், எதிரி தரப்பு சட்டத்தரணியின் விண்ணப்பத்தையும் நீதிபதி கவனத்தில் எடுத்து ஆய்வு செய்ததன் பின்னர் போட்டிக்கு வாகனம் ஓடி,
விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு, தவறுதலாக நடந்துவிட்டது என கூறி நீதிமன்றத்தில் நிவாரணம் பெற முடியாது என தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பேருந்து சாரதிகள் போட்டிக்கு வாகனங்கள் ஓடுவதனாலேயே, அதிகமான விபத்து மரணம் ஏற்படுகின்றது. காயங்கள் மூலம் பலர் அங்கவீனர்களாக்கப்படுகின்றார்கள்.
இந்த வழக்கில் அரச போக்குவரத்து வண்டியும் தனியார் வண்டியும் போட்டிக்கு ஓடியதன் காரணமாக, 97 வயது வயோதிபர் விபத்து மரணத்தில் இறந்துள்ளார். வயோதிபர்கள், சிறுவர்கள், மாணவ மாணவிகளை பாதுகாக்க, இந்த சாரதிகள் தவறுகின்றார்கள்.
இந்த வழக்கின் எதிரி ஓர் அரச போக்குவரத்து சாரதி. அரச போக்குவரத்து வண்டியை ஒட்டியவர். அவருக்குக் கடமைப் பொறுப்பு மிக அதிகமாகும். அரசாங்கத்தைக் காப்பாற்ற வேண்டும்.
அரச தனது வண்டியில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அரசாங்கத்தின் கௌரவத்தையும், தனது அரச கடமை பொறுப்பையும் பாதுகாக்க வேண்டும். ஆனால் இத்தகைய பொறுப்புமிக்க கடமைகளில் இருந்து இவர் தவறியுள்ளார்.
சட்டப்புத்தகங்களில் என்னதான் இருந்தாலும், போக்குவரத்து வண்டிகளின் வேகம் அதிகரிப்பு மக்கள் நடமாட்டங்களைப் பொறுத்து வேறுபடும். யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலத்தில் மக்கள் செறிவு அதிகரித்துள்ளது.
எனவே 40 கிலோ மீற்றருக்குக் குறைவான வேகத்தில் ஓடினயாவது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது, சாரதிகள் கடமை பொறுப்பாகும்.
போட்டிக்கு ஓடி விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு, தவறுதலாக நடந்த விபத்து எனக் கூறி மன்றில் நிவாரணம் பெற முடியாது.
எனவே, இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 2 ஆண்டுகள் கடுழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது.
அத்துடன், இறந்தவருடைய 3 பிள்ளைகளுக்கும் சமமாகப் பங்கிடும் வகையில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா நட்டயீடு வழங்க வேண்டும் எனவும் .இந்த நீதிமன்றம் கட்டளையிடுகின்றது என்றார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக