siruppiddy

வியாழன், 24 அக்டோபர், 2013

பாடசாலைகளில் விசேட தேவையுடைய கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு


விசேட தேவையுடைய பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பத்து வீத சம்பள உயர்வை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
காத்தான்குடியில் இயங்கும் கிழக்கிலங்கை ஸாஹிரா விசேட பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி மற்றும் விற்பனையை இன்று வியாழக்கிழமை காலை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
விசேட தேவையுடைய பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஊழியர்கள் இறைவனுக்காக செய்யும் பணி என்பதை மறந்து விடக் கூடாது.
இந்தப் பணி பொறுமையுடன் தவமிருந்து செய்யும் பணி என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்று இலங்கையில் விசேட தேவையுடையோர்கள் சாதாரண கல்வி நடைமுறைக்கு உள்வாங்கப்படுவதில் பல்வேறு சிரமங்கள் காணப்படுகின்ற இந்த சூழ்நிலையில் இவ்வாறான பாடசாலைகள் நடத்தப்படுவது அதிகம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
உலகில் விசேட தேவையுடையோர் ஒன்றும் இயலாதவர்கள், குறையுள்ளவர்கள் என ஒதுக்கப்படக் கூடாது.

விசேட தேவையுடையோரும் சமூகத்தில் சாதாரண மக்களுடன் இணைந்து வாழ வேண்டும். ஏனெனில் இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் தாம் விரும்பியவற்றை செய்வதற்கான உரிமையும் சுதந்திரமும் உள்ளது.
அதற்கமைவாக விசேட தேவையுடைய மாணவர்களுக்கும் உரிமைகளும் சுதந்திரமும் உண்டு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்தப் பாடசாலையில் நிலவுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை விசேட கவனம் செலுத்தி விரைவில் செய்து தருவேன்.

ஆகவே விசேட தேவையுடையோரை சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக கருதாமல் அவர்களுடைய நலன்கருதி சமூகத்தில் ஓர் அங்கமாக இணைத்து நாம் எல்லோரும் செயற்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை