siruppiddy

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

கண்ணை மறைக்கிறதா... காவி பாசம்?!


குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர் சாமியார் அஸ்ரம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆசிரமம் மற்றும் அறக்கட்டளைகள் இருக்கின்றன. அதிரடி சாமியாரான இவர் மீது ஒரு சில வழக்குகளும் இருக்கின்றன.
இந்நிலையில், 'அஸ்ரம் பாபு என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்' என்று, அவருடைய ஆசிரமத்தில் தங்கியிருந்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பதினாறு வயது இளம்பெண், டெல்லி போலீசில் சமீபத்தில் புகார் செய்தார்.
அந்த ஆசிரமம் இருக்கும் இடம் ராஜஸ்தான் மாநில எல்லைக்குள் வருவதால், அந்த மாநிலத்திலிருக்கும் ஜோத்பூர் போலீஸுக்கு வழக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதையடுத்து, வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆகஸ்ட் 30 அன்று ஆஜராகும்படி, அந்த சாமியாருக்கு ஜோத்பூர் போலீஸ் சம்மன் அளித்திருக்கிறது.
வழக்கமாக பாலியல் பலாத்கார புகார்கள் வந்தால், குறைந்தபட்சம் குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்வது போலவாவது பாவ்லா காட்டுவது போலீஸின் வழக்கம். பெரும்பாலும் குற்றவாளிகளிடம் இருந்து பணத்தைக் கறந்து கொண்டு தப்பிக்க வைப்பதும் நடக்கும். அதிலும் பாதிக்கப்பட்ட பெண் அப்பாவி, ஏழை என்றால், கேட்கவே வேண்டாம்.
சமயங்களில் பாலியல் பலாத்கார புகார்களையொட்டி பொதுமக்கள் கிளர்ந்து எழுந்து போராட ஆரம்பித்தால் (டெல்லி மற்றும் மும்பை சம்பவங்கள்), வீறு கொண்டு எழும்போலீஸ், குற்றம்சாட்டப்பட்டவர்களை 24 மணி நேரத்தில் பிடித்து உள்ளே போட்டு வெளுத்து வாங்க ஆரம்பித்துவிடும். ஆனால், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் ஒரு சாமியார் என்பதால், ராஜஸ்தான் மாநில போலீஸ் கிட்டத்தட்ட வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பது போல சம்மன் அனுப்பிக் கொண்டிருக்கிறது.
ஆனால், இது பொறுக்கவில்லை... பி.ஜே.பி. கட்சியினருக்கு... 'இது ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் கட்சியின் சதிவேலை. வேண்டுமென்றே அஸ்ரம் பாபு மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது. திட்டமிட்ட சதி' என்றெல்லாம் கூப்பாடு போட ஆரம்பித்துவிட்டனர்.
இதே பி.ஜே.பி.தான்... டெல்லி மற்றும் மும்பை கற்பழிப்பு வழக்குகளின்போது... வீதிக்கு வந்து கடுமையாக போராட்டங்களை நடத்தியது. அடிக்கடி டி.வி.யில் தோன்றி ஆவேசமாக பேட்டிகளையும் அளித்தனர் அந்தக் கட்சியினர். இப்போது ஒரு சாமியாருக்கு பிரச்னை என்றதும்... வெளிப்படையாகவே அவரை ஆதரித்து பேச ஆரம்பித்துவிட்டனர்... அந்த 16 வயது இளம்பெண்ணின் நிலையை நினைத்துப் பார்க்காமல்.
போலீஸ் விசாரித்து உண்மையைக் கொண்டு வருவதுதானே நம் நாட்டின் நடைமுறை. அதை எதற்காக இந்த பி.ஜே.பி. எதிர்க்க வேண்டும். தமிழகத்தில் கூடத்தான் பிரேமானந்தா போன்ற சாமியார்கள் மீது வழக்குப் பதிவாகின. தண்டிக்கவும் பட்டார்கள். ஏன்...? தற்போதைய காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மீது கொலை வழக்கே நடந்து கொண்டிருக்கிறது.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிவிடக்கூடாது என்பதுதான் முக்கியமாக இருக்க வேண்டுமே தவிர, அவன் சாதராண மனிதன்... அவர் சாமியார் என்கிற வேறுபாடுகள் எதற்காக?
நாளைக்கு இந்த நாட்டை ஆளப்போகிறோம்... நாங்கள்தான் சுத்தம் சுயம்பிரகாச தொண்டர்கள் என்று பேசும் பி.ஜே.பி.யினர், இந்த விஷயத்தில் சட்ட நடவடிக்கைகளுக்குத்தானே துணை நிற்க வேண்டும். சொல்லப்போனால், 'வழக்கை பதிவு செய்த ராஜஸ்தான் மாநில (காங்கிரஸ்) போலீஸ், உடனடியாக அஸ்ரம் பாபுவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவேண்டும்' என்றல்லவா இந்த பி.ஜே.பி. கோரிக்கை வைத்து போராடியிருக்க வேண்டும்.
பி.ஜே.பி.யினர், காவி பாசத்தோடு, அந்த அஸ்ரம் பாபுவுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு நிற்பது... அந்த 'பாரத மாதா'வுகே அடுக்காது
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை