வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்கள் அனைவரும் மீளவும் நாட்டிற்கு வருகை தரவேண்டும். தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் என்ற பேதம் பாராமல் அனைவரும் புலம்பெயர்ந்த இலங்கையர் என்ற வகையில் நாட்டின் ஐக்கியத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு
விடுத்துள்ளார்.
கொழும்பு கோட்டையிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நேற்று புலம்பெயர்ந்த 150 இலங்கையர்களுக்கு இரட்டைப்பிரஜாவுரிமை வழங்கப்பட்ட பின்னர் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்- ‘உலகளாவிய ரீதியல் புலம்பெயர்ந்த இலங்கையர்கள் இலட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். எனினும் எமது நாட்டில் 1987 ஆம் ஆண்டளவிலேயே இரட்டைப்பிரஜாவுரிமை வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. இதன்படி குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து இதுவரையில் சுமார் 34 ஆயிரம் பேரிற்கு இரட்டைப்பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இதுவரைக்கும் 2000 விண்ணப்பங்கள் இரட்டைப்பிரஜாவுரிமைக்கு
கிடைக்கப்பெற்றாலும் புதிய ஒழுங்குமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் முதலில் விண்ணம் செய்த 450 பேரிற்கு இரட்டைப்பிரஜாவுரிமை வழங்கப்பட்டிருந்தது. இதன் இரண்டாம் கட்டம் என்ற வகையில் நேற்று 150 பேரிற்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட்டது.
இதன்பிரகாரம் இரட்டைப்பிரஜாவுரிமை தொடர்ந்தும் வழங்கப்பட்டு வந்த போதிலும் 2011 ஆம் ஆண்டளவில் முன்னைய ஆட்சியின் போது
இரட்டைப்பிரஜாவுரிமை இடைநிறுத்தப்பட்டது. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆட்சியின் போது மீளவும் இரட்டைப்பிரஜாவுரிமை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்தோடு திட்டமிட்ட சிலருக்கு மாத்திரமே இரட்டைப்பிரஜாவுரிமையை முன்னைய ஆட்சியாளர்கள் வழங்கினர்.
ஆனால் தற்போது புலம்பெயந்தோருக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே வௌிநாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் மீளவும் இலங்கைக்கு வருகை தரவேண்டும். நாட்டின் இன ஐக்கியத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள இன பேதம் பாராமல் புலம்பெயர்ந்த இலங்கை என்ற வகையில் நாட்டின் வளர்ச்சிக்கு எந்த தருணத்திலும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
அதேபோன்று புலம்பெயர்ந்தவர் தமது திறமைகளை இலங்கையின் தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான வளர்ச்சிக்கும் அர்ப்பணிப்பு செய்ய வேண்டும்’ என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக