siruppiddy

புதன், 4 ஜூன், 2014

படித்ததில் பிடித்ததுநானும் நீர்வை மகனென்று!!

விளிம்பில் ததும்பும் பனித்துளிகள் சொட்ட‌
விரைவு வானம் கதிர்கள் உதிர‌
முத்திப்பூக்கள் சொட்டும் தேன் உறிஞ்சி
வாழ்க்கையே வாழையாய்ப்போன நம்மூரு
 
பதமரும்ப காத்திருந்து கொய்த குலைகள்
இதமாய் இருக்கை கட்டி – அதிவிரைவாய்
பட்டிமாடு படையிடையே பச்சைய ஊர்வலம்
கண்கொள்ளாக் காட்சி தரணியில் சொற்பம்தான்
 
கோமயம் கோமியம் தெருப்புழுதியுடன் சேர்ந்து
ஊரெல்லாம் மணம் பரவிட உலாவந்தகாலம்
நேற்றுவரை இரகசியமாய் என்னுள்ளிருந்து
பாடாய்படுத்துகின்றன – எழுதிவிட‌
 
புலரும் பொழுதில் அலறும் கண்டாமணியோசை
நாற்திசையும் – கண்விழிக்க கோரும் நாதமாய்
தொலைவில் கதைபேசும் சிறுபறவைகள் ஒலியுடன்
தேனாய் கலந்து காதுகளிற்கு புகும் இன்பம்
 
மாரிமழையில் பிறக்கும் குளங்கள்
என்பள்ளிப்பருவ நீச்சல் தடாகங்களாய்
நினைகையில் மனம் குளிரிது – மீண்டும்
ஊர் திரும்பனோ என்று மனம் ஏங்குது
 
கள்ளிப்பால், நாயுண்ணி, சுடுமுருங்கைக்கொட்டை
எள்ளிநகையாடும் எருக்கலம் பூ திமிர்
சொல்லியடித்து கதைமுடிக்கும் கிட்டிப்புல், கிளித்தட்டு
நெற்றில் தேடினாலும் மீண்டும் கிடையா
 
நேர்த்தியான தடிசேர்த்து ஊர்பாடும் வசந்தனடி
பார்த்திருந்து மகிழ்ந்தது ஊர் கூட்டமாய்
காத்தவராயன் அரிச்சந்திரன் அத்தியார் முற்றத்தில்
நித்திரையற்று முத்திரை பதித்த ஊர் – ஒருகாலம்
 
காளைகளை விரட்டி வீரம்பறையும் இளம்காளைகளை
மாலையிட்டு வரவேற்கும் சவாரித்திடல்
வேனிக்காலத்தில் இதமாய் துவண்டு
தனிப்போர்க்களமாய் மாறிவிடும் அருமை
 
நெய்தல் பாலையாகி ஈச்சம் பழம் கொய்ய‌
எய்யாதவனையும் குத்திப்பதம் பார்க்கும் ஈச்சம்பற்றை
பெய்யாமழைக்கு ஏங்கும் காலம்
வையாப்புகழ் வாய்ந்த பேச்சியம்மன் படையல்
 
மலரும் நினைவுகள் உதிர்ந்திடாவண்ணம்
புலரும் பொழுதினில் உறுதியெடுப்போம்
நிலவும் ஒருமுறை வியக்கட்டும் – பாரும் ஒருமுறை
பறை சாற்றட்டும் – நானும் நீர்வை மகனென்று
 




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை