siruppiddy

புதன், 25 ஜூன், 2014

போலி பாஸ்போட் தயாரித்தவரது53 நாடுகளுக்கு 200 பேரை அனுப்பினோம்!!!

 
போலி பாஸ்போர்ட் மற்றும் விசா மூலம் இதுவரை 53 நாடுகளுக்கு 200 பேரை அனுப்பியுள்ளதாக கைது செய்யப் பட்டுள்ள கிருஷ்ணமூர்த்தி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். நேற்று சென்னையில் போலி பாஸ்போர்ட், விசா தயாரித்து விற்பனை செய்து வந்த இலங்கையைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான 6 பேரும் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
   இந்நிலையில், இக்கும்பலின் தலைவனாக செயல்பட்ட இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :- 12 ஆண்டுகளாக... நான் கடந்த 2002-ம் ஆண்டு முதல் போலிபாஸ்போர்ட், போலி விசா தயாரித்து விற்கும் தொழில் செய்து வருகிறேன். 2 முறை சிறைக்கு சென்றுவந்தாலும், எனக்கு வேறு தொழில் தெரியாது என்பதால், இந்த தொழிலை விட முடியவில்லை. இலங்கை வாசிகளுக்கு வெளிநாடுகள் கைகொடுத்து வாழ்வு கொடுக்கின்றன. சேவை மனப்பான்மையுடன்... எனவே, பிழைப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கைவாசிகளுக்கு, போலி பாஸ்போர்ட் மற்றும் போலி விசா தயாரித்து கொடுக்கும் தொழிலை, இலங்கை மக்களுக்காக ஒரு சேவைமனப்பான்மையுடன் செய்து வருகிறேன்.
இதோடு எனது பிழைப்பும் ஓடுகிறது. சென்னையில் கெடுபிடி... உலகம் முழுவதும் நெட்வொர்க் அமைத்து இந்த தொழில் நடக்கிறது. உலகம் முழுவதும் 53 நாடுகளில் எங்கள் ஆட்கள் உள்ளனர். இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும், பணிபுரியும் குடியுரிமை அதிகாரிகள் சிலரும், எங்கள் கூட்டத்தில் ரகசியமாக பணியாற்றுகிறார்கள் சென்னை விமான நிலையத்தில் மட்டும் கெடுபிடி அதிகமாக உள்ளது. கணக்கெடுப்பு... போலி பாஸ்போர்ட்டை எளிதில் தயாரித்துவிடுவோம். ஆனால் போலி விசா தயாரித்து, சம்பந்தப்பட்டவர்களை, வெளிநாட்டுக்கு அனுப்புவது மிகவும் கஷ்டமான காரியம்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அகதிகள் முகாமில் தங்கி இருக்கும், இலங்கைவாசிகள் யார்-யார், எந்த நாட்டுக்கு செல்லவிரும்புகிறார்கள் என்பதை, ராஜன் மூலம் கணக்கெடுப்போம். அவர்களது புகைப்படத்தை வாங்குவோம். போலி பாச்போர்ட்டுகள்... காலாவதியான பாஸ்போர்ட்டுகள், வெளிநாடுகளுக்கு போக முடியாதவர்களின் பாஸ்போர்ட்டுகளை டிராவல்ஸ் நிறுவனங்கள் மூலம் விலைக்கு வாங்குவோம். அந்த பாஸ்போர்ட்டுகள் ஒன்றிற்கு, ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை கொடுப்போம்.
அந்த பாஸ்போர்ட்டுகளில் உள்ள புகைப்படங்களை நீக்கிவிட்டு, போலி பாஸ்போர்ட்டு கேட்பவர்களின் புகைப்படங்களை அதில் ஒட்டுவோம். அந்த பாஸ்போர்ட்டுகளில் உள்ள முகவரிகளை நீக்கி விட்டு, போலி முகவரிகளை பதிவு செய்வோம். ஆக பழைய பாஸ்போர்ட்டு நம்பரில், போலி பாஸ்போர்ட்டுகள் தயார். காலாவதியாகும் போலி விசா... இந்த போலி பாஸ்போர்ட்டுகளில், போலி விசாவை தயாரித்து ஒட்டி விடுவோம். அந்த விசா மூலம், குறிப்பிட்ட நாடுகளுக்கு பலமுறை சென்றுவந்ததாக, போலி ரப்பர் ஸ்டாம்பு மூலம் போலி பாஸ்போர்ட்டில் பதிவு செய்துவிடுவோம். சுற்றுலா விசா மட்டுமே போலியாக தயாரித்து கொடுப்போம்.
சுற்றுலா விசா 10 நாட்களுக்கு மட்டும் செல்லுபடி ஆகும். அடுத்து காலாவதியான போலி விசாவை காட்டி, குறிப்பிட்ட நாடுகளின் உண்மையான விசாவுக்கு விண்ணப்பம் செய்வோம். புதிய விசா... போலி விசா மூலம் ஏற்கனவே குறிப்பிட்ட நாட்டுக்கு சென்று வந்ததுபோல, பாஸ்போர்ட்டில் பதிவு செய்யப்பட்டு இருப்பதால், அதை உண்மை என்று நம்பி, உண்மையான விசாவை புதிதாக கொடுத்து விடுவார்கள். அந்த விசாவை வைத்து, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து விடுவோம். குடியுரிமை அதிகாரிகள்... எங்கள் கையாட்களாக செயல்படும் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், எங்களது ஆட்களை சோதனை எதுவும் போடாமல் அனுப்பி விடுவார்கள்.
ஒரு ஆளை அனுப்புவதற்கு, குடியுரிமை அதிகாரிகளுக்கு ரூ.1.5 லட்சம் கொடுப்போம். வெளிநாடு சென்றவுடன், பாஸ்போர்ட் மற்றும் விசாவை கிழித்து எறிந்துவிட்டு, சம்பந்தப்பட்டவர்கள், அகதிகள்போல நடித்து விடுவார்கள். தொழில் ரகசியம்... இலங்கை அகதி என்றால், வெளிநாடுகளில் ராஜமரியாதை கொடுத்து தங்க வைப்பார்கள். பின்னர் காலப்போக்கில், அகதிகள் போர்வையை விலக்கிவிட்டு, குறிப்பிட்ட நாட்டின் குடியுரிமையை பெற்று நிரந்தரமாக, குறிப்பிட்ட நாட்டில் தங்கிவிடுவார்கள். இதுதான் எங்களது தொழில் ரகசியம். இந்த தொழிலை அழிக்க முடியாது. அனுமதி வேண்டும்.... இந்திய அரசு, இலங்கை மக்களை வெளிநாடுகளுக்கு சென்று பிழைப்பு நடத்த, எளிதில் அனுமதிபெற்று கொடுத்தால், இந்த தொழிலை நாங்கள் விட்டு விடுகிறோம். 200 பேர்... கடந்த 2010-ம் ஆண்டு முதல் சுமார் 53 நாடுகளுக்கு 200 பேர்வரை போலி பாஸ்போர்ட் மற்றும் போலி விசா மூலம் சென்றுள்ளனர்.
சென்னையில் இருந்து முதலில் மலேசியா அல்லது சிங்கப்பூர் அல்லது மெக்சிகோ அருகே உள்ள கோட்மாலா என்ற நாட்டுக்கு அனுப்பி வைப்போம். அங்கிருந்து விரும்பிய நாட்டுக்கு செல்வது எளிதில் முடிந்துவிடும். எனது குடும்பம்... எனக்கு 3 மனைவிகள் உள்ளனர். 3 பேரையும் காதலித்து மணந்துள்ளேன். முதல் மனைவி பெயர் சரோஜினி, அவளுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். அவள் கனடா நாட்டில் வசிக்கிறாள். 2-வது மனைவி இளவரசி, சென்னை அரும்பாக்கத்தில் வாழ்கிறாள். அவளுக்கும் 4 பிள்ளைகள் உள்ளனர். 3-வது மனைவி பெயர் தனம். புதுக்கோட்டையைச் சேர்ந்த அவள்தான் தற்போது, என்னுடன் வாழ்கிறாள். அவளுக்கு ஒரு மகன் இருக்கிறான். 2-வது மனைவி இளவரசி, என்னுடன் சண்டை போட்டுவிட்டு தனியாக வாழ்கிறாள்.
 
!!மற்றைய செய்திகள் ..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை