கிழக்கில் உல்லாச புரியான பாசிக்குடா கடலில் குளித்துக் கொண்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவருடன் பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கையாக ஆபாசமாக நடந்து கொண்ட சிவில் உடையில் காணப்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவரை குறித்த பெண் செய்த
முறைப்பாட்டினையடுத்து கல்குடா பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று கல்குடா பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில்,
குறித்த பெண் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், இவர் இங்குள்ள தனியார் சுற்றுலா விடுதி ஒன்றில் கடந்த 3 நாட்களாக தங்கியிருந்ததாகவும் தெரிவித்தனர்.
இவர் வழக்கம் போல் செவ்வாய்கிழமையும், முதல் நாள் திங்கள் கிழமையும் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது குறித்த சந்தேக நபரும் கடலில் குளித்துள்ளார்.
இதன்போது வெளிநாட்டு சுற்றுலா பயணியுடன் தமது மர்ம உறுப்பினை காட்டி ஆபாசமாக நடந்து கொண்டதுடன் தனக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதுடன் தன்னை பின் தொடர்ந்து மேலும் அசௌகரியங்களை 2 நாட்களாக தொடர்ந்து ஏற்படுத்தியதாகவும் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமக்கு ஏற்பட்ட இவ் விபரீதம் எந்தவொரு பெண்ணுக்கும் இடம்பெறக் கூடாது எனவும் குறித்த சந்தேக நபருக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு தமது பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டு புதன் கிழமை வாகரை சுற்றுலா நீதி மன்ற நடவடிக்கைகள் நடைபெறவிருப்பதனால் அங்கு குறித்த சந்தேக நபரை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறான சம்பவங்கள் ஏற்கனவே இப்பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து காணப்படுவதாகவும் இவ்வாறான நிலமை தொடர்ந்து நீடிக்குமானால் சுற்றுலா பயணிகளின் வருகை பாசிக்குடாவில் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தமது வருவாய்க்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக