வடக்கிலிருந்து 4 ரயில்களில் உரிமையாளர்கள்!
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 1960 உரிமையாளர்களுக்குச் சொந்தமான தங்க ஆபரணங்களே அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலிருந்தும் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 1960 பேரும் கிளிநொச்சி மற்றும் வவுனியாவிலிருந்து நான்கு விசேட யாழ். தேவி புகையிரதங்கள் மூலம் இன்று கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் சமகால விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இடம்பெற்றது.
இதன் போது பிரிகேடியர் மேலும் விளக்கமளிகையில்,
முதற் கட்டமாக அடையாளங் காணப்பட்ட வட மாகாணத்தைச் சேர்ந்த 25 பேரின் பெறுமதி வாய்ந்த நகைகளை கடந்த ஒக்டோபர் மாதம் 12ம் திகதி கிளிநொச்சியில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இரண்டாவது கட்டமாக தற்பொழுது அடையாளம் காணப்பட்ட 1960 உரிமையாளர்களுக்கே இன்று கையளிக்கப்படவுள்ளன.
இவர்களில் மன்னாரைச் சேர்ந்த 223 பேரும், வவுனியா 319, கிளிநொச்சி 1187 முல்லைத்தீவு 186, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 45 பேரும் இவற்றில் அடங்குவர்.
வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலிருந்தும் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 1960 பேரும் கிளிநொச்சியிலிருந்து 2 புகையிரதம் வவுனியாவிலிருந்து 2 புகையிரதம் என்ற அடிப்படையில் நான்கு விசேட யாழ். தேவி புகையிரதங்களில் இன்று கொழும்புக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரையிலான நேரத்தில் பொல்காவலை பிரதேசத்தை வந்தடையும் இந்த புகையிரதம் அங்கு சிறிது நேரம் தரித்து நிறுத்தப்பட்டு இராணுவத்தினரால் பகல் போசனம் வழங்கப்படவுள்ளது.
அதன் பின்னர் அங்கிருந்து புறப்படும் இந்த புகையிரதங்கள் காலை 11.15 மணி தொடக்கம் நண்பகல் 12.30 மணி வரை கொழும்பு, கொம்பனித் தெரு புகையிரத நிலையத்தை வந்தடையவுள்ளது. அதன் பின்னர் இவர்கள் அலரி மாளிகைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர் என்றார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக